Thursday, December 29, 2016

அலினா பெர்னன்டஸ் பிடல் எதிர்ப்பின் அடையாளம் ?

                          ஜனனாயகத்தன்மை என்ற மனித குல முன்னேற்றத்தின் தவிர்க்கமுடியாத காரணியையே முதலாளித்துவாதிகள்  ஃபிடலுக்கு எதிராக பயன்படுத்துவதையே கட்டுரையின் மையமாக ஆக்கி மாற்றுவில்  "ஒரு சர்வாதிகாரி தன்னிலை கடக்க முடியுமா " எனும் தலைப்பில் ஒரு கட்டுரை வெளி வந்தது . அவ்வாறு எழுதுகையில் ஃபிடல் மீதான விமர்சனங்களில் முக்கியமானவைகளை பதிய நேரிடும்போதுதான் பிடலின் மகள் அலைனா கூபாவிலிருந்து வெளியேறிய  செய்தியையும் பதிய வேண்டியது அவசியமாயிற்று. எனினும் அதை ஓட்டி ஒரு சிறு விவாதம் எழுந்தது. இந்த தகவலை பற்றி சற்று விரிவாக கூறும்படி ஒருவர் கேட்டிருந்தார். இது போக இக்கட்டுரையை படித்த மேலும் ஒரு நண்பர் தனது அலுவலகத்தில்  கூபவாசியான கூப-அமெரிக்க மேலாளர் ஒருவரிடம் உரையாடியுள்ளார் , பிடலை பற்றி அவரும் பல விமர்சனங்களை முன்வைத்து , பிடல் பற்றி வெளியுலகில் வரும் செய்தி அனைத்தும் கம்யூனிஸ்டுக்கள் கிளப்பும் வதந்தி  என கூறியுள்ளார்!!! எனவே பிடலை பற்றி இக்கட்டுரையில் பதிந்த தகவலை பற்றி, சற்றே விரிவாக கட்டுரை எழுதியவன் என்ற முறையில் , நிகழ்வுகளை உண்மை மாறாமலும் முடிவில் கட்டுரையாளருடைய பார்வையையும் சேர்த்து இங்கு எழுதப்பட்டுள்ளது.

              முதலில் அலைனாவை பற்றி கூறிவிடுகிறேன். ஃபிடல் புரட்சிக்கான தயரிப்பு பணிகளில் சக தோழர்களுடன் தலைமறைவாக ஈடுபட்டிருக்கையில்தான் அலைனாவின் தாயாரோடு அறிமுகம் ஏற்ப்பட்டது. பிடல் ஒரு எதிர்கட்சிக்காரராக , கலகக்காரராக  மக்கள் மத்தியில் அறியப்பட்டிருந்த நேரமது. அலைனாவின் தாயார் ரெவுலீடா  ஒரு பணக்கார ஆளுங்கட்சி பிரமுகரின்  மகளாவார். ஃபிடல் மற்றும் தோழர்களுக்கு தன்னுடைய இல்லங்களில் ஒன்றில் இரகசியமாக தங்க இடம் கொடுத்து உதவியவர். இவர்  ஏற்கனவே மணமானவர் ஒரு குழந்தையும் உண்டு. 1953 இல் இருந்து 1959 வரை பிடலின் பல சர்க்கார் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு உறுதுனையாக இருந்தவர்.காலப்போக்கில் அறிமுகம் நட்பாகவும் , காதலாகவும் மாறியது.  இவர்களுக்கு பிறந்த குழந்தைதான் அலைனா. இவர்களின் காதல் தெரிந்தபிறகு அலைனாவின் முதல் கணவர் விலகி விட்டார். மேலும் அவரும்  ஒரு ஆளுங்கட்சி பிரமுகராகையால் புரட்சி முடிந்தவுடன் நாட்டை விட்டு (புரட்சிக்கு பிந்தைய் நடவடிக்கைகள் பிடிக்காமல்) முதல் குழந்தையுடன் வெளியேறிவிட்டார். அலைனாவும் தாயாரும் மட்டும்  கூபாவில் தங்கி விட்டனர்.  புரட்சிக்கு பிந்தைய நாட்களில் கிட்டதட்ட நாட்டு மக்கள்  அனைவருக்கும் பிடலுக்கும் , ரிவோலிட்டாவுக்கும் இருந்த உறவு தெரியும். ஆயுனும் ஃபிடல் ரிவோலொட்டாவை மணம் செய்துகொள்ளவில்லை. இதற்க்கான காரணத்தை வேறு யாரையும்விட ஃபிடலும் , ரிவோலிட்டாவுமே அறிவர். ஃபிடல் தனது குழந்தையயும் , காதலியையும்   சந்திக்க அவர்கள் இல்லத்திற்க்கு அனவரும் அறியும் படியே வீட்டிற்க்கு வந்து பார்த்து செல்லுவார் என்று அலைனாவே பல இடங்களில் கூறியிருக்கிறார்.  இந்த சூழ்நிலமையில்தான் அலைனா ஃபிடலின் மகளாக ஒரு பெண்னாக வளர்கிறார்!!

  
    அலைனாவின் எழுத்துக்களிலும் சரி பேசும்போதும் சரி  இரு விதமான உணர்வுகளை காணலாம்.
தந்தையின் மீதுள்ள வெறுப்பு , ஒரு நாட்டின் அதிபரின் மகளாக இருந்தும் தகுந்த அங்கிகாரம் கிடைக்கவில்லையே என்ற ஏக்கம்.  இதற்க்கான காரணம் பல. அலைனாவை சுற்றி வந்த கூட்டம் அதில் ஒரு மிகப்பெரிய காரணம். அலைனாவின் நன்பர்களில் பலர் பிடலை பிடிக்காததால் அலைனாவையும்  ஒதுக்கி உள்ளனர். அலைனாவுடன் ஆத்மார்த்தமாக பழகியவர்களும் அலைனாவால் அரசாங்கத்திடமிருந்து ஏதாவது பலன் வருமா என்று துண்டில் போட்டு பார்த்துள்ளனர்  , அரசாங்கம் அவ்வாறு இயங்கவில்லை எ தெரிந்ததும் விலகியுள்ளனர். இவயல்லாமல் பிடல் ஒரு தந்தையாக  அலைனாவிடம் நடந்து கொண்ட விதம் முரண்களாலானதுதான்.  ஒரு நேரம் பாசமிகு தந்தையாக பொம்மைகளை வாங்கிக்கொடுத்தும் மற்றுமொரு நேரம் சற்றே விலகியிருந்தும் இவாறு  உணர்வுகளின் கலைவ்யாகவே அவர்களது உறவு இருந்திருக்கிறது. இது பல நேரத்தில் அலைனாவிற்க்கு சலிப்பை தந்திருக்கிறது. அலைனாவின் 12 வயதில் பிடல்  தனது வீட்டுப்பெயரான காஸ்ட்ரோவை பயன்படுத்திக்கொள்ளுமாறு அலைனாவிற்க்கு அனுமதி கொடுத்திருக்கிறார். ஆனால் அப்போது அலைனா கிட்டதட்ட மனதளவில் தந்தையிடமிருந்து விலகத்தொடங்கி விட்டார். எனவே தனது அப்பாவாக பொது வெளியிலும் சரி பெயருக்கும் பின்னாலும் சரி அம்மாவின் முதல் கணவரின் பெயரையே பயண்படுத்திக்கொண்டு உள்ளார். கூறப்போனால் அவருடைய படிப்பிற்க்கு எற்ற வேலையை அரசாங்கத்தில் பெறும் வாய்ப்பிருந்தும் அவ்வாறு செய்யாமல் ஒரு இரவு விடுதியில் மாடலாக பணியாற்றினார்.தனது தந்தைக்கு தகுந்த பாடம் புகுட்டுவதற்க்காக தான் அந்த முடிவை எடுத்ததாக  அவர் பல முறை கூறியும் இருக்கிறார். இவ்வாறு வாழ்க்கை சென்று கொண்டிருக்கையில் இதன் உச்சமாக 37 வது வயதில்  கூபாவிலிருந்து போலி பாஸ்போர்ட்டுடன் ஸ்பெயினுக்கு குடியேறினார் . மியாமியில் அவரது  தந்தையை (தாயின் முதல் கணவர்) அடிக்கடி  பார்க்க சென்று கொண்டும் , ஸ்பெயினில் வசிக்கும் அலைனா இன்று வரை பிடல் எதிர்ப்பின் ஒரு அடையாளமாக உள்ளார். 

இறுதியாக பிடலின் குடும்பத்தில் , குறிப்பாக  ரிவோலொட்டாவுக்கும் பிடலுக்கும்  இருந்த காதலை பற்றியோ , அலைனா சென்ற பிறகும்  ரிவோலிட்டா  கூபாவில் ஏன் தங்கினார் என்பதை பற்றியோ  , பிடல் முரணான  தந்தையாக இருந்ததை பற்றியோ, பெண்னுடலை ஒரு ஆயுதமாக கருதும் அளவுக்கு அலைனாவை இட்டுச்சென்றது தந்தையின் பாசத்திற்க்கான ஏக்கம் மட்டும்ந்தானா என்பதை பற்றியோ நமக்கு அக்கறை குறைவே. ஆயினும் சில முக்கியமான விழுமியங்களை பற்றிய கேள்வி எழுப்பும் தளமாகத்தான் ஒரு மூன்றாவது மனிதனாக, இடதுசாரியாக ஒரு கம்யூனிஸ்டாக எனது இந்த விளக்கத்தை பார்க்கிறேன்.

 ஒரு ஆணுக்கும் பெண்னுக்குமான உறவை அந்த இருவர் மட்டுமல்லாது உலகமே கூடி நிர்னையிக்கும் நிலை  ஒரே ராத்திரியில்  சோசலிச உலகில்  மறைந்துவிடுமா? 
ஒரு ஆண் பெண்னை விரும்புவதற்க்கும் , ஒரு பெண் ஒரு ஆனணை தேர்வு செய்வதற்க்கும் உள்ள வேறுபாடுகள் மனிதப்பிறவியில் எனைய  மிருகங்களை விட  குறைவு எனினும், இந்த வித்தியாசம்   முற்றிலும்  இல்லாமல் போய்விடுமா ?
சமூக சூழல்களில் நிகழும் மாற்றங்களின் விளைவு , கலவியல் தேர்வு முறைகளில் என்னற்ற மாற்றங்களை ஏற்ப்படுத்தும் என்பது தெள்ளத்தெளிவு , அவ்வாறு இருக்கையில் , திருமண பந்தம் , காதல் , திருமணம் தாண்டிய உறவு அதில் இருக்கும் சிக்கல்  முக்கியமாக  முதலாளித்துவ உலகிலிருந்து சோசலிச விழுமியங்களுக்கு மாறாத சமுகத்தில் பெண்ணுக்கு ஏற்ப்படும் சிக்கல்களை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் பெண் விடுதலை எவ்வாறு முழுவதும், சாத்தியம் ?
இந்த சூழ்நிலமையில் வளரும் குழந்தைகளை உளவியல் ரீதியில் எவ்வாறு அனுக வேண்டும் என்பது சோசலிச அரசாங்கத்தின்  மிக முக்கியமான கடமையல்லவா?

இந்த கேள்விகளுடன் எனது விளக்கமும் ,பார்வையும் முடிந்தாலும், இந்த விவாதம்  பல கட்டங்களில் தொடர்ச்சியாக நடக்க வேண்டும்.

No comments:

Post a Comment